காலாரா வியாதி:-ஒருமுறை ஷீர்டியில் காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது. ஊர்க்காரர்கள் மிகவும் பயந்து புறத்தேயுள்ள மக்கள் தொடர்பையெல்லாம் நிறுத்திக்கொண்டனர். பஞ்சாயத்தார் கூடி தொத்துவியாதி தடுப்புக்கும், ஒழிப்பிற்கும் இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர். அவைகளாவன:
1. எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது.
2. அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.
எவரேனும், இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்தார்களாலும், அதிகாரிகளாலும் அபராதம் விதிக்கப்படுவர். இவைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால் காலராக் கட்டளைகளை சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை. இக்கட்டளைகள் அமுலில் இருக்கும்போது ஒரு எரிபொருள் வண்டி அங்கு வந்து கிராமத்துக்குள் நுழைய விரும்பியது. கிராமத்தில் எரிபொருள் பஞ்சம் இருந்தது எல்லோருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் மக்கள் எரிபொருள் வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்.
பாபாவுக்கு இவைகளெல்லாம் தெரியவந்தன. அவர் அவ்விடத்திற்குச் சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டிவரும்படி கூறினார். பாபாவின் செய்கைக்காக ஒருவருக்கும் குரல் எழுப்பத் தைரியம் இல்லை. தமது துனிக்கு அவருக்கு எரிபொருள் தேவைப்பட்டது. எனவே அதை அவர் வாங்கினார். அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன் வாழ்நாள் முழுவதும் எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும், பகலும் எரியவிட்டார். இதற்காக அவர் எப்போதும் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தார். பாபாவின் பாபாவின் வீடான மசூதி அனைவருக்கும் தடைகளற்றும், திறந்து வைக்கப்பட்டும் இருந்தது. அதற்குப் பூட்டோ, சாவியோ கிடையாது. அங்கிருந்து சில ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்.
பாபா இதைக்கண்டு முணுமுணுக்கவில்லை. பிரபஞ்சமனைத்திலும் கடவுள் வியாபித்திருந்ததை அவர் கண்டார். எனவே எவருடனும் அவர் பகையோ, கேட்ட எண்ணமோ கொண்டதில்லை. முழுவதுமாகத் துறந்தவராயினும் மக்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்கும் பொருட்டு அவர் இல்லறத்தார் போன்று வாழ்ந்தார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)
No comments :
Post a Comment