முன்னுரை:-
இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் யாவும் மாயையின் விளையாட்டே. கடவுளின் ஆக்கும் ஆற்றலே. இவைகள் உண்மையில் இருப்பவை அல்ல. உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது. இருளின் காரணமாக ஒரு கயிற்றையோ, ஒரு மாலையையோ பாம்பாக நாம் எண்ணிக்கொள்வதைப் போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே நாம் காண்கிறோம். காணக்கூடிய பொருட்களிலெல்லாம் உள்ளுறைந்து கிடக்கும் மெய்ப்பொருளை நாம் காண்பதே இல்லை.
நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார். பொருட்களை அவைகளின் தோற்றத்தில் காணப்படுவதுபோல் பாராமல் உண்மையான ஒளியில் அவைகளைக் காணுமாறு நம்மை ஊக்குவிக்கிறார். எனவே நாம் சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள் காட்சியை நமக்கருள வேண்டிநிற்போம்.
ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த் நமக்குக் கொடுத்திருக்கிறார். சத்குருவின் பாதாம்புயத்தைக் கழுவும் நன்னீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள் என்னும் அஷ்ட கமலங்களையும் 'ஒருமை மனது' என்னும் கனியையும் அவருக்குச் சமர்ப்பிப்போம். பக்தி என்னும் நறுமணக் கரும்பொடியை அவர் தலைக்கு இட்டு, பற்று என்னும் வேட்டியைக் கட்டிவிட்டு நமது தலையை அவர் பாதங்களில் வைப்போம்.
இத்தகைய எல்லா அணிமணிகளாலும் சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும் அவரிடம் சமர்ப்பித்து விடுவோம். உஷ்ணத்தைப் போக்குவதற்குப் பக்தி என்னும் சாமரம் கொண்டு வீசுவோம். இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப் பின் அவரை இங்ஙனம் வேண்டுவோம்.
"எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள். அந்தர்முகமாகச் செய்யுங்கள். நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி, ஆத்மா உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள்.
ஆன்மாவையும், உடலையும் (உடலுணர்வு, மற்றும் அகங்காரம்) உம்மிடம் ஒப்புவித்தோம். எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள். அதன்மூலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம். தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்." இப்போது இந்த அத்தியாயத்தின் கதைகளுக்கு வருவோம்.

No comments :
Post a Comment