Saturday, 11 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 26 - பகுதி 2

No comments

பகத் பந்த்:-

மற்றொரு சத்குருவின் சீடரான பந்த் என்பவர் ஷீரடிக்கு வரும் நல்லதிர்ஷ்டம் பெறநேர்ந்தது.  அவருக்கு ஷிர்டிக்குச் செல்லும் எண்ணமில்லை.  ஆயின் மனிதன் ஒரு விதமாக எண்ணக் கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுகிறார்.  அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருக்குபோது ஷிர்டிக்குப் போய்க்கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும் காண நேர்ந்தது.  அவர்கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர்.  அவரால் இயலாதென்று சொல்ல முடியவில்லை.  அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர்.  பந்த் விராலில் இறங்கினார்.   

பின்னர் ஷீர்டி விஜயத்திற்காகத் தனது சத்குருவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டார்.  எல்லோரும் மறுநாள் ஷீர்டியை அடைந்து மசூதிக்குச் சுமார் 11 மணிக்குச் சென்றனர்.  பாபாவின் வழிபாட்டுக்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர்.  ஆனால் பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார்.  அவர்கள் எல்லோரும் பீதியடைந்தனர்.  எனினும் அவரைத் திரும்ப உணர்வுக்குக் கொண்டுவர தங்களால் இயன்றதைச் செய்தனர்.  பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட நீராலும் பிரக்ஞைக்கு  வந்து, அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.

மற்றொரு குருவின் சீடர் அவர் என்று அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா அஞ்சாமலிருக்கும்படி அவருக்கு உறுதிகூறி, அவரது சொந்தக் குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கீழ்கண்டவாறு அவரிடம் கூறினார்.  "வருவது வரட்டும், விட்டு விடாதே.  உனது ஆதாரத்தையே (குருவையே) உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்".

இம்மொழிகளின் குறிப்பை பந்த் உடனே அறிந்துகொண்டார்.  இவ்விதமாக அவர் சத்குருவை நினைவுகூர்ந்தார்.  பாபாவின் இந்த அன்பை அவர்தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment