ஷாமாவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்:-
ஷாமா, பாபாவின் மிக நெருங்கிய பக்தர். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஒரு பிரதியை அவருக்கு அளிப்பதன் மூலம் பாபா அவருக்கு அருள் செய்ய விரும்பினார். ஒருமுறை ஒரு ராம்தாஸி பக்தர் ஷீர்டிக்கு வந்து அங்கு சில காலம் இருந்தார். அவர் தினந்தோறும் பின்பற்றிய ஒருமுறை ஒழுங்குமுறை கீழ்வருமாறு. அதிகாலையில் அவர் எழுந்திருந்து முகம் கழுவி, குளித்துவிட்டு, காவி ஆடை உடுத்திக்கொண்டு, திருநீற்றை உடலில் தரித்துக்கொண்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அத்யாத்ம ராமாயணம் ஆகிய புனித நூல்களை நம்பிக்கையுடன் படிப்பார். அவர் இவற்றை அடிக்கடி பலமுறை படித்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் பாபா விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஷாமாவுக்கும் ஆரம்பித்து வைத்து, அவருக்கு அருள்செய்ய நினைத்தார். எனவே ராம்தாஸியைத் தன்னருகில் அழைத்து, "நான் தாங்கமுடியாத வயிற்றுவழியால் அல்லலுறுகிறேன். சூரத்தாவாரை (sennapods - மிதமான பேதி மருந்து) உட்கொண்டாலன்றி வலி நிற்காது. எனவே கடை வீதிக்குப் போய் இம்மருந்தை வாங்கி வா" என்றார். பின்னர் தமது யதாஸ்தானத்திலிருந்து இறங்கி ராம்தாஸி படித்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துத் தமது இடத்துக்கு வந்து ஷாமாவிடம், "ஓ! ஷாமா, இப்புத்தகம் மிகவும் பயனுள்ளது, பலனுள்ளது, எனவே இதை உனக்குப் பரிசளிக்கிறேன். ஒருமுறை நான் தீவிரமாகக் கஷ்டப்பட்டேன். என் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. அத்தகைய தருணத்தில் நான் இந்நூலை எனது மார்போடு வைத்து அணைத்துக்கொண்டேன். அப்போது, அது எத்தகைய ஆறுதலை அளித்தது. அல்லாவே என்னைக் காப்பாற்றக் கீழிறங்கி வந்தாரென்று நினைத்தேன். எனவே இதை உனக்குக் கொடுக்கிறேன். மெதுவாகப் படி. தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு நாமத்தையாவது படி, அது உனக்கு நன்மை செய்யும்".
ஷாமா: அது எனக்கு வேண்டாம். அதன் சொந்தக்காரனான ராம்தாஸி ஒரு பைத்தியம், பிடிவாதக்காரன், கோபக்காரன். நிச்சயம் என்னுடன் சண்டைக்கு வருவான். மேலும் நான் ஒரு பட்டிக்காட்டான். ஆதலால் எனக்கு இந்நூலிலுள்ள சமஸ்கிருத எழுத்துக்கள் படிக்கத் தெரியாது.
ஷாமா, பாபா தமது இச்செய்கையின் மூலம் தன்னை ராம்தாஸிக்கு எதிராகக் கிளப்பிவிடுவதாக நினைத்தார். பாபா அவருக்காக என்ன நினைத்தார் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. ஷாமா ஒரு பட்டிக்காடாக இருந்தபோதும், அவருடைய நெருங்கிய பக்தராகையால் இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை அவர் கழுத்தில் சூட்டி உலகத் துபங்களினின்று அவரைக் காக்க பாபா எண்ணியிருக்க வேண்டும்.
கடவுள் நாமத்தின் சக்தி யாவரும் அறிந்ததே. அது நம்மை எல்லாப் பாவங்களினின்றும் காப்பாற்றி, பிறப்பு - இறப்புச் சுழலிநின்றும் நம்மை விடுதலையாக்குகிறது. இதைவிடச் சுலபமான சாதனம் வேறெதுவும் இல்லை. நம் மனதை மிகச்சிறந்த முறையில் அது தூய்மைப்படுத்துகிறது. அதற்கு எவ்வித சடங்குமுறைகளோ, தடையோ கிடையாது. அது அவ்வளவு சுலபம், அவ்வளவு பயனுள்ளது. ஷாமா இந்த சாதனையில் ஆர்வம் கொள்ளாதவராய் இருப்பினும் பாபா இதைத்தான் ஷாமாவைச் செய்யும்படி விரும்பினார். எனவே பாபா அதை அவர்மேல் திணித்தார்.
ஏக்நாத் மஹராஜ் இம்மாதிரியாகவே ஒரு ஏழைப்பிராமணனிடம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத் திணித்து அவனைக் காப்பாற்றினார் என்று வெகு நாட்களுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதும் மனதைத் தூய்மைப்படுத்துகின்ற திறந்த அகலமான வழியாகும். எனவேதான் பாபா இதை ஷாமாவிடம் திணித்தார்.
ராம்தாஸி சூரத்தாவாரை விதைகளுடன் உடனே திரும்பினார். அங்கிருந்த அண்ணா சிஞ்சணீ கர் நாரதர் வேலை செய்யவிரும்பி நடந்ததையெல்லாம் அவரிடம் உரைத்தார். ராம்தாஸி உடனே கோபத்தால் குதித்தார். தனது முழு வெறியுடன் ஷாமாவிடம் இறங்கி வந்தார். தனக்கு வயிற்றுவலி என்ற பெயரில் மருந்து வாங்கிவர அவரை அனுப்பும்படி பாபாவைத் தூண்டிவிட்டது ஷாமாதான் என்றும் இவ்வாறாக அவரது புத்தகத்தை எடுத்துக்கொண்டார் என்றும் கூறினார். ஷாமாவை அவர் திட்டவும் செய்து அவர் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லையானால் அவர்முன் தன் மண்டையை உடைத்துக்கொள்ளப் போவதாகக் கூறினார். ஷாமா அமைதியாக அவருடன் எதிர்த்துப் பார்த்தார். அது பயனளிக்கவில்லை. பின் பாபா அன்புடன் அவரைநோக்கி "ஓ! ராம்தாஸி, என்ன விஷயம்? ஏன் இவ்வளவு கலங்கிப் போயிருக்கிறாய்? ஷாமா நம் பையன் இல்லையா? வீணாக அவனை ஏன் திட்டுகிறாய்? இவ்வளவு சண்டைபோடும் ஆளாக நீ எப்படி இருக்கிறாய்? மிருதுவான, இனிமையான மொழிகளைப் பேச உன்னால் முடியாதா? நீ தினந்தோறும் இந்தப் புனித நூல்களைப் படிக்கிறாய், எனினும் உன் மனது தூயமையற்றதாயும், உனது உணர்வுகள் கட்டுப்பாடில்லாமலும் இருக்கின்றன! நீ என்ன ராம்தாஸி போ! இவைகள் எல்லாவற்றிலும் நீ பற்றற்று கவனமின்றி இருக்கவேண்டும்.
இந்தப் புத்தகத்தை நீ இவ்வளவு அதிகமாக விரும்புவது வியப்பாயில்லை? உண்மையான ராம்தாஸிக்கு 'மமதா' (பற்று) இருக்கக்கூடாது, ஆனால் 'சமதா' (எல்லோரையும் ஒன்று எனப்பாவிக்கும் பண்பு) இருக்கவேண்டும். ஷாமா பையனுடன் ஒரு புத்தகத்துக்காக நீ இவ்வளவு சண்டை செய்துகொண்டிருக்கிறாய், போ! உன் இடத்தில் அமர்ந்துகொள். பணம் கொடுத்தால் ஏராளமாகப் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் மனிதர்கள் கிடைக்கமாட்டார்கள். நன்றாக நினைத்துப் பார். நன்றாக நினைத்துப் பார்த்துத் தயவுள்ளவனாய் இரு. உன் புத்தகம் என்ன மதிப்புப் பெறும்? ஷாமாவுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நான்தான் அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். உனக்கு அது மனப்பாடமாகத் தெரியும். ஷாமா அதைப் படித்துப் பலனடைய வேண்டும் என்று நான் எண்ணினேன். எனவேதான் அதை அவனிடம் கொடுத்தேன்" என்றார்.
பாபாவின் மொழிகள் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன. அவைகளின் பலன் ஆச்சரியமானது. ராம்தாஸி அமைதியானார். ஷாமாவிடம் அதற்குப் பதிலாக பஞ்சரத்னி கீதை ஒன்று எடுத்துக் கொள்வதாகக் கூறினார். ஷாமா அதிக சந்தோஷமடைந்து, "ஒன்று ஏன்? பதிலாக உனக்குப் பத்துப் பிரதிகள் தருகிறேன்" என்று கூறினார்.
முடிவாக இவ்விஷயம் சமாதானத்துக்கு வந்தது. எந்தக் கடவுளை அறியவேண்டுமென்று அவர் கவலைப்பட்டது கிடையாதோ அவரைப் பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ள பஞ்சரத்னி கீதையை ராம்தாஸி கேட்டது ஏன்? தினந்தோறும் மசூதியில் பாபாவின்முன் மதப் புத்தகங்களைப் படித்த ராம்தாஸி, ஷாமாவிடம் அவர் முன்னிலையிலேயே சண்டை செய்வானேன்? என்ற கேள்விகளையெல்லாம் கருதுங்கால் பழியை யாரிடம் ஒதுக்குவது என்பதையும், யாரைத் திட்டுவது என்பதையும் நாம் அறியோம். இந்நிகழ்ச்சி நடந்திராவிட்டால் ஈஸ்வர நாமத்தின் மகிமை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஆகிய விஷயங்களெல்லாம் ஷாமாவின் அறிவிற்கு எட்டியிருக்காது என்பதை மட்டும் நாம் அறிவோம். எனவே பாபாவின் கற்பிக்கும் முறையும் ஆரம்பித்துவைக்கும் முறையும் விசேஷமானது என்று நாம் காண்கிறோம். இவ்விஷயத்தில் ஷாமா அந்நூலைப் படிப்படியாகக் கற்கவே செய்தார். புனே இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரும் ஸ்ரீமான் பூட்டியின் மருமகனுமான பேராசிரியர் G.G.நார்கே M.A., M.Sc., என்பவருக்கு அதை விவரித்துச் சொல்லும் அளவுக்கு அதில் வல்லமை பெற்றார்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment