ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது, எல்லா தீர்த்தங்களிலும், புனித ஆறுகளிலும் நீராடிய புண்ணியம் அவனை வந்தெய்துகிறது. அதே மாதிரியாக ஒரு மனிதன் சத்குருவின் பாதங்களில் அடைக்கலம் புகும்போது, மூவரையும் (பிரம்மா, விஷ்ணு, மஹாதேவர்), பரப்பிரம்மத்தையும் வணங்கும் பேறு அவனுக்கு உண்டாகிறது. கற்பகத் தருவும், ஞானசாகரமும் நமக்கு ஆன்ம உணர்வை அளிப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும்.
ஓ! சாயி, தங்களது கதைகள்பால் எங்களுக்கு ஆர்வம் உண்டாகச் செய்யுங்கள். சாதகப் பறவை மேகங்களினுள் உறையும் நீரைப் பருகி இன்பமடையும். இதைக் கற்போரும், கேட்போரும் அதே மன நிறைவுப் பாங்கில் இவைகளை ஆர்வத்துடன் பருகட்டும். தங்களது கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களும், அவர்களது குடும்பமும் சாத்வீக உணர்வுகள் அனைத்தையும் பெறட்டும். அதாவது மனம் உருகி கண்களில் நீர் நிறைய அவர்கள் மூச்சு ஒரே சீராக அமைந்து அவர்கள் மனம் அமைதியடைந்து, மயிர்க்கூச்செறிந்து, அழுது, தேம்பி உடல் குலுங்கட்டும். எங்கள் பகைமையும் வித்தியாசங்களும், பெரியனவாயினும் சிறியனவாயினும் மறைந்தொழியட்டும்.
இவைகள் எல்லாம் நடந்தால், குருவின் கிருபை அவன்மீது மலர்ந்திருக்கிறது என்பது பொருள். இத்தகைய உணர்வுகள் உன்பால் எழும்போது குரு மிகமிக மகிழ்கிறார். ஆத்ம உணர்வு என்னும் இலட்சியத்தில் குரு உனக்கு நிச்சயமாக வழிகாட்டுவார். பாபாவிடம் முழுமையான, இதயபூர்வமான சரணாகதி எய்துதலே மாயையின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். மாயைக்கு அப்பால் வேதங்களால் உன்னை எடுத்துச்செல்ல முடியாது. சத்குரு ஒருவரே அங்ஙனம் செய்யமுடியும். பரம்பொருளை எல்லா ஜீவராசிகளிடமும் காணமுடியும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment