Tuesday, 7 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - அத்யாயம் 20 - பகுதி 4

No comments

ஈசாவின் நீதி:-

ஈசா உபநிஷதத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று அது அளிக்கும் நீதிபோதனைகள்.

நுண்பொருள் கோட்பாட்டியல் நிலைகளைக் குறித்து உபநிஷதங்களில் காணும் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்டே நிச்சயமாக உபநிஷதத்தின் நீதியும் அமைக்கப்பட்டுள்ளது.  உபநிஷதத்தின் ஆரம்ப மொழிகளே கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கின்றன.  இந்த நுண்பொருள் கோட்பாட்டியல் நிலையென்று தெளியப்பட்ட முடிவிலிருந்து கிளைத்தெழும் பிறிதோர் முடிவாக அது அளிக்கும் நீதிபோதனையாவது, அவரே யாண்டும் நிலவியுள்ளார்.  தனக்குக் கடவுளால் அருளப்பட்ட யாவையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையில் கடவுள் தனக்கு அருளியவற்றை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.  

பிறர் பொருளைக் கண்டு பேராசைப்படுவதை உபநிஷதம் தடுக்கிறது என்பது இயல்பாகவே தொடர்ந்து அறியப்படுகிறது.  யாதாகினும் கடவுளின் ஆணையே என்றும் எனவே, அது நமக்கு நன்மையளிக்கும் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளவைகளைக் கொண்டு நாம் திருப்தியடையவேண்டும் என்று நாம் பொருத்தமாகவே அறிவுறுத்தப்படுகிறோம்.

மற்றுமொரு நீதிபோதனை யாதெனின், சாஸ்திரங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த கர்மங்களை ஆண்டவரது சங்கல்பம் என்று அமைவடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, அந்த நம்பிக்கை உள்ள மனப்பாங்குடன் மனிதன் தனது வாழ்நாளை எப்போதும் கர்மம் செய்துகொண்டிருப்பதிலேயே கழிக்கவேண்டும் என்பதேயாகும்.  செயலின்மை என்பது இவ்உபநிஷதத்தின்படி, நமது ஆன்மாவை அரிக்கும் புழுவாகும்.  மனிதன் இம்முறைப்படி கர்மங்கள் புரிவதில் தனது வாழ்நாளைக் கழிக்கும்போது மட்டுமே நிஷ்காம்யம் என்கிற நிலையை எய்துவதை எண்ண இயலும்.

முடிவாக அதன் வாசகங்கள் கூறுவதாவது "ஆத்மாவினுள் அனைத்து ஜீவராசிகளையும், அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவையும் காண்பவன் - உண்மையில் அனைத்து ஜீவராசிகளும், மற்றும் உளதாய் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகவே ஆகிவிட்ட அப்பேர்ப்பட்ட மனிதன் எங்ஙனம் மயக்க நிலைக்கு ஆட்பட இயலும்?  ஆழ்ந்த மனத்துயரமடைவதற்கு அவனுக்கு அடிப்படைக் காரணம் யாதாக இருக்க முடியும்?

வெறுப்புணர்ச்சி, சித்தத்தின் மயக்கம், ஆழ்ந்த மனத்துயரம், யாவும் ஆத்மாவை யாண்டும் தரிசிக்க இயலாத நமது பண்பிலிருந்தே கிளம்புகின்றன.  ஆயின் எவனொருவன் அனைத்துப் பொருட்களிலும் ஏகத்தையே (ஒருமையையே) தெளிவாக உணர்கிறானோ, எவனுக்கு ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகிவிட்டதோ, அதே உண்மையின் காரணமாக மனித இனத்தின் குறைபாடுகளினால், இனி ஒருபோதும் பாதிக்கப்படாதவனாகின்றான்" (Page 169-170 of the Creative Period by M/s. Belvalkar and Ranade).

ஸ்ரீ ஸாயியைப்  பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
                                                                                                 (தொடரும்…)


No comments :

Post a Comment